செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு

சென்னை, ஜன.5–

தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவுநேர ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்களில் வார இறுதி நாள்களில் தடை உள்ளிட்ட விழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுப்பு அல்லது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *