செய்திகள்

தமிழ்நாட்டில் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்

சென்னை, ஆக. 22–

தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை சென்னையில் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன், மற்ற 37 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கப்பட்டது.

திட்டம் விரிவாக்கம்

இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் 100சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

மேலும் நாளை மறுநாள் முதல் சென்னையில் இருக்கும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மைய திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, 37 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *