முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை, பிப்.20-–
தமிழக அரசின் பட்ஜெட் சமூகநீதியை மையமாக கொண்டு தயாரான பட்ஜெட் என்றும், இது தமிழ்நாட்டின் 7 பெருங்கனவுகளுக்கு இலக்கு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச்சொல்லும் அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பொதுவாக பட்ஜெட் என்பது நிதியை மையமாக கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதுவும் சமூகநீதியை மையமாக கொண்டு தயாரான இந்த பட்ஜெட், அனைத்து மக்களுக்குமான சமநீதியையும், சமநிதியையும் வழங்கி தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது.
அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் இலக்குகளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக இந்த பட்ஜெட் அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
இலக்கை அமைத்துக்கொள்வது தான் வெற்றிக்கான முதல் படி. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காக கொண்டுள்ளது. சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 இலக்குகளை கொண்டதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
குடிசை இல்லாத் தமிழ்நாடு
குடிசை இல்லாத் தமிழ்நாடு, வறுமை ஒழிப்பு, பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், மாணவர்களுக்கு கல்விக் கடன், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், நீர்நிலைப் பாதுகாப்பு, கணினிமயமாக்கம், சாலைகள், குடிநீர் வசதிகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு, தொல்லியல், விண்வெளி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட்டின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது என்பதுதான். கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக்கு கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் ஒவ்வொரு அறிவிப்பும் அமைந்துள்ளன.
நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு பயன்படுத்துவதாக இந்த பட்ஜெட்டை வடிவமைத்துள்ளோம். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு, நிதிச் சூறையாடல்கள் நடந்து முடிந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தது தி.மு.க. கடன்களை மட்டுமே சொத்துகளாக வைத்து விட்டு போனார்கள்.
அதனை மனதில் வைத்து ‘நிதி இல்லை’ என்ற பல்லவியையே பாடிக் கொண்டிராமல் நிதியை திரட்டும் செயல்களை செய்தோம்.
மாநிலத்தின் நிதி வளம் சுரண்டல்
இதற்கிடையில் மத்திய அரசானது மாநிலத்தின் நிதி வளத்தை சுரண்டும் செயல்களை தொடர்ந்து செய்தது. நியாயமாக மாநிலத்துக்கு தர வேண்டிய நிதி ஒதுக்கீடுகளையும் தர மறுத்தது. கடன் வாங்கி திட்டங்களை தீட்டுவதற்கும் தடை செய்தது. இப்படி அனைத்து பக்கங்களிலும் வந்த நிதி நெருக்கடிகளையும், நிர்வாகத் தொல்லைகளையும் தாண்டியும், பொறுத்துக் கொண்டும்தான் இத்தகைய வெற்றியை தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது.
இதுபோன்ற பொருளாதார நெருக்கடியை தருவதன் மூலமாக தமிழ்நாடு அரசின் அனைத்து துறை வளர்ச்சி செயல்பாட்டை தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அந்த தடைகளையும் வென்று, அனைவருக்குமான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாக திகழும் காலம் விரைந்து ஏற்படும்.
திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, ‘இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்’ என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.