செய்திகள்

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி 70% அதிகரிப்பு

சென்னை, அக். 9–

தமிழ்நாட்டில், தற்போது நோய் எதிர்ப்பு சக்தியின் விகிதம் 70 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் உருவாகி உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து, தமிழ்நாடு சீரோ அமைப்பு கடந்த ஜூலை மாதம் ஆய்வுப் பணியை துவங்கியது. நோய் தொற்றுக்கு ஆளான 22,000-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

முன்னதாக சென்னையில் 94 விழுக்காடும், திருநெல்வேலி மற்றும் மதுரையில் 96 விழுக்காடும், ஏனைய தென்மாவட்டங்களிலும் 96 விழுக்காடும் இருந்தது. அதேவேளை, திருப்பூர், கோயம்புத்தூரை உள்ளிடக்கிய 10 மேற்கு மாவட்டங்களிலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தது. அதனால் அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி போடு பணி முடுக்கிவிடப்பட்டது.

70 விழுக்காடு அதிகரிப்பு

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் தமிழ்நாடு சீரோ ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் நோய் எதிர்ப்பு குறைந்து காணப்பட்ட 10 மாவட்டங்களிலும் மீண்டும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இது அம்மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 64 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டால் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதனால் கொரோனா பரவல் மூன்றாவது அலை ஏற்படும் போது பாதிப்புகள் குறைந்து காணப்படும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *