செய்திகள்

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனும் ஆளுநர் ரவி தனது பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா?

கவர்னருக்கு கமல்ஹாசன் கேள்வி

சென்னை, ஜன. 7–

தமிழ்நாட்டை தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என கூறும் ஆளுநர் ரவி, தமது பெயரை புவி என்று மாற்றி கொள்வாரா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவருக்கே உரித்தான பாணியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் அனலை கிளப்பி உள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக மூத்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆளுநரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் கேள்வி

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு, கமல்ஹாசன் சென்னையில் நேற்று விருந்து அளித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ” பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்றுங்கள் என்று சொல்லுவதற்கு ஆளுநர் யார்? ரவி என்ற அவருடைய பெயரை புவி என்று மாற்றிக் கொள்ள சொன்னால் அதற்கு அவர் உடன்படுவாரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார் கமல்ஹாசன்.

“பாஜகவின் மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் நடத்தும் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்றது. பாஜகவின் அரசியல் மதத்துக்கானது; மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது’ என்று கமல் பேசினார்.

முன்னதாக அவர், ‘தமிழ்நாடு வாழ்க’ என்று தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *