தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜன.28–
“தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கடல் ஆமைகள் கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஆமைகளின் இறந்த உடல்கள் கரையொதுங்குவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த 21–ந் தேதி அன்று அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, அரசு முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வனத்துறை தலைமை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆமைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கரையொதுங்குவதற்கான காரணங்கள், அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் மீன்வளத்துறை மூலம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் 5 நாட்டிகல் மைல்கள் (9.26 கி.மீ) தூரம் வரை மீன்பிடிக் கப்பல்கள், இழுவை மடிவலைகளைக்கொண்டு மீன்பிடித்தல் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்காலத்தில் ஆமை வெளியேற்றும் கருவியை பொருத்தாமல் இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
டிரான்ஸ்பாண்டர்களை
அணைக்கக்கூடாது
மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கும் போதும், கடலில் செயல்படும்போதும், ஜிபிஎஸ் டிரான்ஸ்பாண்டர்களை சில இடங்களில் அணைத்து வைக்கப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு ஜிபிஸ் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து வைக்கக்கூடாது என மீனவளத்துறையில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய வழிமுறைகளை கடைபிடிக்காத கப்பல், படகுகளுக்கு அரசு வழங்கும் டீசல் மானியம் மற்றும் பிற படிகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட மாட்டாது. மேலும், கடல் ஆமைகள் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலங்களில் இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் அவர்களது தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு வாரம் ஒரு முறை கூடி கடல் ஆமைகள் நடமாட்டம், இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்களை பரிமாறிக் கொள்ளும். மேலும், இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல்சார் அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை போன்ற துறைகளின் அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் படகுகளின், கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் ஏதும் உள்ளதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பிடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆமைகள் இறந்து கிடந்தால்
பிரேதப் பரிசோதனை
தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளின் நடமாட்டம் குறித்த நீண்டகால தொலைநோக்கு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆமைகள் இறந்து கரையொதுங்கும் இனங்களில் பிரேதப் பரிசோதனை உடனுக்குடன் மேற்கொள்ளவும், பிரேத பரிசோதனையின் எண்ணிக்கையை வனத் துறை அதிகப்படுத்தி (குறைந்த பட்சம் 50%) இறப்புக்கான காரணம் குறித்த அறிவியல் முடிவுகள் உடனுக்குடன் பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக கடல் ஆமை பற்றி ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் முட்டையிடும் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளிலும் தெரு நாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் கடற்கரையோரங்களில் உரிமம் பெறாத உள்ளூர் உணவகங்களை ஒழுங்குபடுத்தவும், கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில் கடற்கரை முகப்பு விளக்குகள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக எரியக்கூடாது என ஏற்கனவே உள்ள அரசாணையை தவறாமல் நடைமுறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பிறகு, கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் கடல்பகுதியில் பல்வேறு துறைகள் அடங்கிய அலுவலர்கள் குழு கூட்டு ரோந்து மேற்கொண்டது.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் கலெக்டர்கள் மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எண்ணூர், காசிமேடு, பெசன்ட்நகர், முட்டுக்காடு மற்றும் கோவளம் பகுதிகளில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தகைய கூட்டங்கள் அனைத்து கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ள வனத்துறை, மீன்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் ஆமைகள் இறந்து கரையொதுங்குவது கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.