செய்திகள்

தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்

Makkal Kural Official

சென்னை, பிப் 11–

இன்னும் 5 ஆண்டுக்குள் அதாவது (2030-)க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அறிவுறுத்தி உள்ளார்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை தி.நகரில் அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை அமைச்சர் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ. கணேசன் பேசியதாவது:–

இவ்வரசு பொறுப்பேற்றது முதல், 570 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகையாக 1 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு தண்டனையில் முடிவுற்ற பின்னர், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களில் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மற்றும் இதர சிறப்புப் பிரிவு தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் இறுதி நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

குறு நாடகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் குறு நாடகம் நடைபெற்றது. 2023-–24ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த சென்னை, தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி, சேலம் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதர துணை இயக்குநர் இலக்கியா மற்றும் வருவாய் கோட்டாச்சியர் க்யூரி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஆகியோருக்கு அமைச்சர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை அரசுசெயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், காவல்துறை தலைவர் கயல்விழி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு துணை செயலாளர் ச.வேங்கடலட்சுமி, சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் செந்தில் பாபு, தொழிலக பாதுகாப்பு துறை இயக்குநர் செ.ஆனந்த், காவல் துறை துணைஆணையர் ஜி.வனிதா, கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *