செய்திகள்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ‘மலையேற்றத் திட்டத்தை’ தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்

Makkal Kural Official

சென்னை, அக் 25

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் விதமாகவும் தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் சார்பில் தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மலையேற்றத் திட்டம், திட்டத்துக்கான இலச்சினை (லோகோ), இணையவழி (www.trektamilnadu.com) முன்பதிவு ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, தமிழ்நாடு வன அனுபவக் கழக சிறப்பு பணி அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்து இருக்கிறது.

மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவை கொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும், வனங்களையொட்டியுள்ள கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மலையேற்றத்துக்கான கட்டணத்துடன், காப்பீட்டுக்கான கட்டணம் உள்ளடங்கி உள்ளது.

www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் மலையேற்றத் திட்டம் தொடர்பான புகைப்படம், காணொளிக் காட்சிகள், 3டி அனிமேஷன், மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 100 சதவீதம் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலமே மலையேற்றத்துக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த மலையேற்ற திட்டத்துக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர், பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடனும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோர், பாதுகாவலரின் துணையோடு எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *