செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24-ம் தேதி துவக்கி வைப்பு

Makkal Kural Official

சென்னை, பிப்.12–

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும், தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலமாக www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

840 பேருக்கு அனுமதி

இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுவரை முதல்வர் மருந்தகம் அமைக்க மொத்தமாக 840 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த இடமாக இருந்தாலும், அதற்கான சான்றிதழ் மற்றும் சொத்து வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாகவே முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

சென்னையில் 33 இடங்களில்

இந்நிலையில் வரும் 24–ந்தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் கொடுக்கப்படும். அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இதன்பின் ரூ.1.50 லட்சத்திற்கு மருந்துகள் அளிக்கப்படும். அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்கள் மூலமாக மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கலாம்.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *