செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் வீடுகளில் இரவில் திடீர் சோதனை: 560 பேர் கைது

சென்னை, செப். 24–

தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு முதல் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 265 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குற்றங்களை தடுக்கும் விதமாக நேற்று இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர்.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்க, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். அதன்படி, சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

256 அரிவாள்கள் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆப்ரேசனில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், கத்தி மற்றும் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைதான நிலையில், கஞ்சா மற்றும் மாவா பொட்டலங்களும் சிக்கியுள்ளன. ராமநாதபுரத்தில் -79, திண்டுக்கல்லில்-44, சிவகங்கை-37, திருவள்ளூரில்-45, பெரம்பலூரில்-6, புதுக்கோட்டையில்-13, கன்னியாக்குமரியில்-39, நெல்லையில்-37, தென்காசியில்-73, திருவாரூரில்-8, தஞ்சையில்-62 பேர் என மொத்தம் 560 ரவுடிகள் கைதாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *