தமிழிசையிடம் அமித்ஷா கண்டிப்பு
ஐதராபாத், ஜூன் 12–
தமிழக பாஜகவில் அண்ணாமலை தரப்பு, தமிழிசை தரப்பு என இரு அணிகளுக்குள் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா மேடையிலேயே தமிழிசையை அமித்ஷா கண்டித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வெங்கைய நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்
.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக விழா மேடைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அவரை கூப்பிட்ட அமித்ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளிக்கிறார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித்ஷா, காட்டமாக பேசும் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியானது.
இதனால், தமிழக பாஜக உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கை கேட்டது
கட்சி மேலிடம்
முன்னதாக, தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அண்ணாமலை செயல்பாடுகளே காரணம் என கட்சி நிர்வாகிகள் புகார்கள் கூறி வந்தனர். இதனிடையே அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் எனவும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணாமலை பா.ஜ.க.வில் பதவி வழங்கியதையும் தமிழிசை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானது. இதையடுத்து அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது.
பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பலர் தான் சொல்வதை கேட்பதில்லை எனவும், கட்சியின் முழு கட்டுப்பாட்டை தனக்கு அளித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறலாம் என மேலிடத்தில் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா தி.மு.க. உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்கு முன்னரே அறிக்கை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.