செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட மற்றும் சாதனைகள் புரிந்த பிரமுகர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா, மேகாலயா ஆளுநர் சி.ஹெச் விஜயசங்கர் ஆகியோர் காணொளி மூலமாக தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர், பல்வேறு மாநிலங்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, அம்மாநில உணவுகளும் பரிமாறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்த நாள் மாநிலங்களையும், அம் மாநில மக்களையும், கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கான தினங்களும் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் பண்பாடு, மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இதனை கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு

நமது நாட்டின் உயர்ந்த கலாச்சாரத்தை மறந்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பும், மற்ற மாநிலங்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே சவுராஷ்டிரா, குஜராத்தி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை எந்த மாநிலத்தை சேர்ந்த வரும், பிற மாநிலத்தவராக இருந்தாலும் கூட அவர் இந்தியராகவே பார்க்கப் பட வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைகள் ஒழிந்து, இப்போது செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் வரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மகா கும்பம் நிகழ்வின் மூலமாக ஒரு நாளுக்கு பல கோடி மக்கள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், அசாம் ஆகிய அனைத்து மாநில மக்களும் ஒருங்கிணைந்து காணப்படுகிறார்கள். ஒற்றுமையின் அடையாளமாக மகா கும்பம் நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. பொதுவாகவே வடகிழக்கு மாநில பெற்றோர்கள், தங்களது பெண்களின் கல்விகாக , டெல்லியை பாதுகாப்பாக உணராமல் தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கான விருந்தோம்பல் என்பது சிறந்ததாகவே இருந்து வருகிறது. விருந்தோம்பலில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதுடன், தமிழ் மொழி மற்றும் கலாசாரம் மிக சிறந்த ஒன்று என்றும் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *