செய்திகள் வர்த்தகம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு தங்கமயில் விருது

கரூர், ஜூன் 14–

சமுதாய பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு (டிஎன்பிஎல்) தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த விழாவில் விருதினை இதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

புதுடெல்லி இன்ஸ்டியூட் ஆப் டைரக்டர்ஸ் என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.

அதன்படி, கரூர் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி, இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதையடுத்து, 2020ம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணர்வு செயல் பாட்டுக்காக வழங்கப்படும் தங்கமயில் விருதுக்கு 319 நிறுவனங்கள் போட்டியிட்டதில், சிறந்த செயல்பாட்டுக்காக தேசிய அளவில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

காணொலி காட்சி மூலம் கடந்த ஜூன் 10ந்தேதி நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று காகித நிறுவனம் செயல்படுத்தி வரும் நலப்பணித்திட்டங்கள் பற்றியும், கொரோனா தடுப்பு பணிகளின் பங்களிப்பு பற்றியும் உரையாற்றி விருதைப் பெற்றுக் கொண்டார்.

1 லட்சம் ஏக்கர் தோட்டங்கள்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஆலைகளை சுற்றியுள்ள அடித்தட்டு மக்களுக்கும் நலிந்த மாணவர்களுக்கும் பல சமூக நலப்பணிகளை, தனது விரிவான நலத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருவது அதன் கொள்கையாகும். திருச்சி மாவட்டத்தில் தனது ஆலைக்குட்பட்ட இடத்தில் சுமார் 1000 மாணவர்கள் சேர்ந்து பயிலக் கூடிய புதிய பள்ளி கூடத்தை நிறுவி வருகிறது. சுமார் 40,000 மேற்பட்ட விவசாயிகளுடன் ஒன்றிணைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான தோட்டங்களை மேம்படுத்தும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பணி, சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க கூடியதாக உள்ளது.

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு சொந்தமான சமூக கூடத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் வசதியுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை கடந்த மே 31ந் தேதியன்று முதலமைச்சர் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த மையத்திற்கு இந்நிறுவனம் தடையில்லா ஆக்சிஜன், மின்சாரம் மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சிலிண்டர்களில் ஆக்சிஜனை அடைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள தங்கமயில்விருது அதன் சமூக நலப்பணிகளை பொறுப்புடன் வரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *