செய்திகள்

தமிழ்நாடு, கேரள மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்

ஜெய்ப்பூர், ஜூலை 3–

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் முதன்முறையாக பெண்கள், பட்டியல் இனத்தினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேவஸ்தான் எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோவில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதில் அறநிலையத்துறை அமைச்சகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.

அனைத்து சாதியினர் நியமனம்

இந்நிலையில், இந்த துறையின் சார்பில் 2014ம் ஆண்டில் நடைபெற்ற அர்ச்சகர்களுக்கான தேர்வின் முடிவு 9 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் நடவடிக்கையால் தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு, 65 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பெண்கள் உட்பட 17 பேர் பட்டியல் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கடந்த 1973ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அரசு இயற்றிய சட்டத்தால் சமூக நீதியில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உருவானது. ஆனாலும் வழக்குகள் காரணமாக அச்சட்டம் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்ற சில மாதங்களிலேயே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அமல்படுத்தினார். அதேபோல், 2017ம் ஆண்டு கேரள அரசு, பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை அர்ச்சகராக நியமித்து இருந்தது.

இதன் மூலம், கேரளா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண்கள், பட்டியல் இனத்தினர் மற்றும் பழங்குடியினத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ராஜஸ்தானில் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *