செய்திகள்

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.29-

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் 2 நாள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.

மாநாட்டுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

மாநில அரசு நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூர்வீக செடி இனங்களை நடவு செய்து, காடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து, பசுமையான இடங்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு மரம் நடப்படுகிறது. இது புதிதாக ஒரு வனத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் மாநிலத்தின் வளமான மற்றும் நீண்ட கடற்கரையைப் பாதுகாக்க தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோன்று காலநிலை கல்வியறிவு-விளையாட்டு முறை சார்ந்த கல்வி திட்டத்தை வெளியிட்டார்.

இந்த இயக்கம் உலக வங்கியின் உதவியுடன் ரூ.1,675 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பணி செயல்படுத்தப்படும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

கடலோர பல்லுயிர் பெருக்கம், கடலோர பாதுகாப்பு, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாசு குறைப்பு மற்றும் திட்ட மேலாண்மை. ஆமைகள் பாதுகாப்பு மையங்கள், பல்லுயிர் பூங்காக்கள் மற்றும் ஈர நில மறுசீரமைப்பு மையங்கள் போன்ற திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இயக்குனரும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைமை திட்ட இயக்குனருமான ஏ.ஆர்.ராகுல்நாத், சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் ஆலிவர் பால்ஹாட்செட், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் சபை தலைமை நிர்வாக அதிகாரி அருணாபா கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *