செய்திகள்

தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் காகிதம், அட்டை உற்பத்தி உயர்ந்தது

சென்னை, நவ. 13–

தமிழக அரசின் பொது நிறுவனமான தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் 2வது காலாண்டில் காகித உற்பத்தி, காகித அட்டை உற்பத்தி உயர்ந்துள்ளது. லாபமும் ரூ.6.52 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.1005.70 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இது ரூ.537.94 கோடியாக காணப்பட்டது.

கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனம் ரூ.13.20 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே கால அளவில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.6.52 கோடியை ஈட்டியுள்ளது.

செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,130.38 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,931.01 கோடியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூ.102.35 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.31.20 கோடியைப் பெற்றுள்ளது.

செப்டம்பர் காலாண்டில் காகித உற்பத்தி 87,164 டன்னிலிருந்து 1,06,749 டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, காகித அட்டையின் உற்பத்தியும் 28,659 டன்னிலிருந்து 47,487 டன்னாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *