செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் மின்னணு உற்பத்தி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 3:

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ரூ.41 ஆயிரத்து 863 கோடி மதிப்புள்ள மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்னணு பொருட்கள் உற்பத்தி தொடர்பான ரூ.12 ஆயிரத்து 704 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ரூ.41 ஆயிரத்து 863 கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் 22 மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின்கீழ் இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, அரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் இத்திட்டங்கள் அமைகின்றன.

டிக்சன், சாம்சங் டிஸ்பிளே நொய்டா பிரைவேட் லிமிடெட், பாக்ஸ்கான், ஹிண்டல்கோ இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்த முதலீடுகளை செய்கின்றன. இதன்மூலம் 33 ஆயிரத்து 800 நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

செல்போன் உற்பத்தி, தொலைத்தொடர்பு, நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், வாகனத்துறை, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.

இந்த உற்பத்தியால், வினியோக தொடர் வலுப்படுவதுடன், வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கலாம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *