செய்திகள்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு

தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் நியமனம்

சென்னை, ஆக.22-

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை தலைவராக கொண்டு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் சமீபத்தில் இயற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இணையவழி விளையாட்டுக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதற்கு ஏற்கனவே தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்து இருந்தது.

இணையவழி சூதாட்டமான இணையவழி பந்தயம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான சட்ட திருத்தங்களை தமிழக தடை சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி இருந்தார்.

ஆணையம் அமைப்பு

இந்த நிலையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதாவின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் செயல்படுவார்.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சாரங்கன், கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் செல்லப்பன், போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் ஓய்வு பெற்ற மருத்துவம் சார்ந்த உளவியல் அறிஞர் ரவீந்திரன், ‘இன் – கேங்’ குழும நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் பணிகள் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, திறமை அல்லாத மற்றும் பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் எவை எவை? என்பதை கண்டறிந்து, அரசுக்கு அதுபற்றிய பரிந்துரையை இந்த ஆணையம் அளிக்கும்.

உள்ளூர் ஆன்லைன் விளையாட்டு களுக்கான சான்றிதழை இந்த ஆணையம் வழங்கும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நேரத்தின் அளவு, பயன்களின் அளவு, வயது கட்டுப்பாடு ஆகியவற்றை ஆணையம் வகுத்தளிக்கும்.

ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து அவற்றை ஆணையம் பராமரிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *