சேலம், ஏப். 27–
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் கூட நாம் கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் நிதியை குறைத்து தான் வழங்கினார்கள். தி.மு.க. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. மாநில அரசின் நிதியில் இருந்து பணத்தை செலவு செய்து விட்டு பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசிடம் கேட்டு நிதி பெறலாம். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அண்ணா தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
வெப்பம் அதிகரித்ததால் தமிழகத்தில் ஓட்டுகள் குறைவாக பதிவாகி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு கிடைக்காத போது, தேர்தல் ஆணையம் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.