போஸ்டர் செய்தி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 9 விருது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Spread the love

சென்னை, ஜூலை 11–
இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 9 விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து, புதுடில்லியில் 2019 மார்ச் மாதம் 26–ந் தேதியன்று அன்று நடைபெற்ற 2017–18–ம் ஆண்டிற்கான அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் போக்குவரத்துக் கழகங்களின் பல்வேறு செயல்திறன்களுக்கான விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – சேலம் மற்றும் கும்பகோணம் ஆகிய கழகங்களுக்கு வழங்கப்பட்ட 9 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13–ம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கூட்டமைப்பில் 62 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
அனைத்து மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மற்றும் செயல்திறன்களை ஆய்வு செய்து அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் ஆண்டுதோறும் பல வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய அளவில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 2013–ம் ஆண்டு தொடங்கி அதிக அளவிலான விருதுகளை தொடர்ந்து பெற்று சாதனை நிகழ்த்தப்பட்டுவருகிறது.
உயர்ந்தபட்ச உற்பத்தி திறன்
அதன் அடிப்படையில், புதுடெல்லியில் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் அன்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், 2017–18–ம் ஆண்டிற்கான, தமிழ்நாட்டின் மூன்று அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 9 விருதுகளை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ள விருதுகளின் விவரம் வருமாறு:–
* புறநகர் பேருந்துகளில் பேருந்து உற்பத்தித் திறனில் உயர்ந்தபட்ச செயல்திறனுக்காக (529.35 கி.மீ) முதல் இடத்திற்கான கேடயம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
* புறநகர் பேருந்துகளில் பேருந்து உற்பத்தித் திறனில் உயர்ந்தபட்ச செயல்திறனுக்காக (483.76 கி.மீ) இரண்டாம் இடத்திற்கான கேடயமும், புறநகர் சேவையில் 1 லிட்டர் டீசலுக்கு அதிகமான கி.மீட்டர் இயக்கத்திற்காக (1001 – 4000 பேருந்துகள்) 5.48 கே.எம்.பி.எல். முதல் இடத்திற்கான கேடயமும், புறநகர் சேவையில் எரிபொருள் 1 லிட்டருக்கு இயக்கப்படும் தூரத்தில் அதிகபட்ச முன்னேற்றம் (5.42 இலிருந்து 5.48) இரண்டாம் இடத்திற்கான கேடயமும், புறநகர் பேருந்துகளை இயக்கும் கழகங்களில் உருளிப்பட்டை செயல்திறனில் (3.27) தொடர்ச்சியாக 5 வது முறையாக முதலிடத்தை பெற்றதற்கான சான்றிதழும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
* உயர்ந்தபட்ச உருளிப்பட்டையின் செயல்திறனுக்காக (3.77) முதல் இடத்திற்கான கேடயமும், குறைந்தபட்ச இயக்க செலவுக்கான விருது (வரி நீங்கலாக) – புறநகர் பிரிவு (1001க்கு மேல் 4000 பேருந்துகள்) – 39.77 சி.பி.கே.எம். முதல் இடத்திற்கான கேடயமும், புறநகர் சேவையில் எரிபொருள் 1 லிட்டருக்கு இயக்கப்படும் தூரத்தில் அதிகபட்ச முன்னேற்றம் (5.48இலிருந்து 5.51) இரண்டாம் இடத்திற்கான கேடயமும், புறநகர் சேவையில் 1 லிட்டர் டீசலுக்கு அதிகமான கி.மீட்டர் இயக்கத்திற்காக (1001 – 4000 பேருந்துகள்) (5.51 கே.எம்.சி.எல்.) தொடர்ச்சியாக 5 வது முறையாக முதலிடத்தை பெற்றதற்கான சான்றிதழும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *