எடப்பாடி, விஜய் உள்ளிட்டோர் இரங்கல்
சென்னை, மே 25–
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் மறைவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆளுதல் கூறினார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (வயது 84) வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவெய்திய செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச்சேவைகளுக்காக என்றென்றும் நினைவு கூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
நான் ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்தியபோதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல் நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.
அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான சலாவுதீன் அயூப் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தலைமை காஜி சலாவுதீன் அயூப்பின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற வேளையில், அவரது ஆன்மா எல்லாம்வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த இரங்கல் பதிவில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முப்தி முஹம்மது சலாவுதீன் அயூப் காதிரி அஜ்ஹரி காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் என அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர். அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முப்தி முஹம்மது சலாவுதீன் அயூப் காதிரி அஜ்ஹரியைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
![]()





