சென்னை, ஜூலை 30–
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிஃப்ட் உள்ளிட்ட சில படங்களை தன்னுடைய லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இந்நிலையில் இன்று காலை முதல் இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் சோதனை
கடந்தாண்டு மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர், கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக கூறி, சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வாங்கி விட்டு ரவீந்தர் ஏமாற்றிவிட்டதாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சுமார் ஒரு மாத சிறை தண்டனைக்கு பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் ரவீந்தரின் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக புகார் வந்ததை அடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Libra productions #Kavin #lift #Tamilcinema