செய்திகள்

தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கவேண்டும்: மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

‘கச்சத்தீவை மீட்டெடுக்க இது தகுந்த தருணம்’

சென்னை, மே 27–

கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்றும், தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

சென்னையில் நடந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பிரதமர் நரேந்திரமோடிக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–-

தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருகை தந்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில், மேலும் சில முக்கியமான கோரிக்கைகளை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நான் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண கூடிய வகையில், கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமருக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.

15.5.2022 அன்று வரை தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவை தொகையான ரூ.14 ஆயிரத்து 6 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில், ஜி.எஸ்.டி. இழப்பீடு காலத்தை ஜூன் 2022–-க்கு பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீடித்து தர வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் வற்புறுத்தி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலக செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமை தரத்தோடு, உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

இறுதியாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ‘நீட்’ முறையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட பிரதமரை இந்த தருணத்தில், தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்த கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை நம்முடைய பிரதமர் உணருவார் என்று நான் உளமாற நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.