செய்திகள்

தமிழும் கலைஞரும் போல; ஸ்டாலினும் உழைப்பும் போல வாழுங்கள்: மணமக்களிடம் அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்

சென்னை, ஜன. 23–

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் 6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

100 குடும்பங்களுக்கு வீடு

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–

‘ஆறு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலாக திருமணம் மண்டப திறப்பு விழாவில் பங்கேற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது போல், இந்த திருமண மண்டபம் தாமதம் ஆனாலும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் இந்த திருமண மண்டபம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த முறை ரவிச்சந்திரன் இருந்தாலும், ஏராளமான திட்டங்களை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செய்திருக்கிறார். நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும் பணி தொடங்க உள்ளது.

கலைஞரும் தமிழும் போல்…

மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல வேண்டும் என வாழ்த்துவார்கள். மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஏறச் சென்றார்கள். ஆனால், அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை, கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் சொன்னார். ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கிறார்கள்’ என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *