செய்திகள்

தமிழில் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்காக கண்ணையன் தட்சணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது

முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

புதுடெல்லி, மார்ச்.12-

தமிழில் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி நிறுவனத்தால் சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார் விருது, பால புரஸ்கார் விருது மற்றும் சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான விருதுகள் 24 மொழிகளுக்கும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழில் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலாக திருச்சியைச் சேர்ந்த கண்ணையன் தட்சணாமூர்த்தியின் ‘கருங்குன்றம்’ என்கிற நூல் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. எஸ்.தேவதாஸ், குளச்சல் யூசுப் என்கிற எஸ்.முகமது யூசுப், குறிஞ்சிவேலன் என்கிற செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட மூவர்குழு தேர்வு செய்து இருக்கிறது.

இந்த நூலை கண்ணையன் தட்சணாமூர்த்தி ‘தி பிளாக் ஹில்’ என்கிற ஆங்கில நாவலில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்து இருந்தார்.

அகில இந்திய வானொலி நிலைய அதிகாரியான இவர், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர். 20-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்து உள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

‘தி பிளாக் ஹில்’ என்கிற ஆங்கில நாவலை எழுதியவர் மமாங் தய். இவர் அருணாசலபிரதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். அருணாசல பிரதேசத்தில் இந்திய அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத்துறையில் இருந்த ஆர்வத்தால் அரசுப்பணியில் இருந்து விலகிவிட்டார்.

அவர் எழுதிய புகழ்பெற்ற இந்த நாவல், அருணாசல பிரதேசத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது. அருணாசல பிரதேசம் வழியாக திபெத்துக்கு செல்ல முயற்சிக்கும் பிரெஞ்சு பாதிரியார் ஒருவரின் கதையை இது விவரிக்கிறது. இந்த நாவலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல மமாங் தயிக்கு மத்திய அரசு ஏற்கனவே பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்து இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள மொழிப்பெயர்ப்பு விருது ரூ.50 ஆயிரம் ரொக்கமும், தாமிரப்பட்டயமும் கொண்டது ஆகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவை வழங்கப்படும் என சாகித்ய அகாடமி நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஸ்டாலின் பாராட்டு

கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து,சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *