செய்திகள் முழு தகவல்

“தமிழில் அர்ச்சனை என்பது சமத்துவத்தின் அரிச்சுவடி” : செந்தலை ந.கவுதமன்


செந்தலை ந.கவுதமன்


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்ல பல திட்டங்களை அறிவித்து தலைசிறந்த தமிழகத்தை கட்டமைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது.

அதே சமயம், திட்டங்கள் அனைத்தும் சமத்துவம், சமூகநீதி என்ற கோட்பாட்டின் சாராம்சம் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்தும் வரும் பணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கோயில் நிலங்களை மீட்பது, கோயில் வாடகையை அதிகரிப்பது, காணாமல் போன சிலைகளை மீட்பது, அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைத்தல் என அமைச்சர் சேகர் பாபுவின் ஒவ்வொரு பேட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதற்கட்டமாக மயிலாப்பூரில்…

அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் முதற்கட்டமாக துவக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முத்தாய்ப்பாக, ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் கீழ் கோயில்களில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக, 47 பெரிய கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

”கல்தோன்றி மண்தோன்றா காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி” என்ற பெருமை பெற்ற தமிழ் சமூகத்தின் “தமிழில் அர்ச்சனை” என்பது நீண்ட நெடிய பயணத்தை கொண்டது.

“தமிழும் தெய்வீக மொழிதான்”: சட்டசபையில் கருணாநிதி

அந்த பயணத்தின் தொடர்ச்சியாக, அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் 1971-ல் அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் எம்.கண்ணப்பன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் பேசுகையில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதை விமர்சிக்கும் சிலர், சம்ஸ்கிருதம் தெய்வீக மொழி. அதனால், அர்ச்சனை செய்வதற்கு சம்ஸ்கிருத மொழியே ஏற்றது என்று கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. தமிழும் தெய்வீக மொழிதான். பழங்காலத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாராயணங்கள் தமிழில்தான் இயற்றப்பட்டன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கோயில் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டன என்ற வாதத்தையும் ஏற்க முடியாது’’ என்றார்

பின்னர், எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா திமுக ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், கோயில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தடைகள் பல தாண்டி தற்போதைய தமிழக அரசின் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு தமிழறிஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கோவையில் நடந்த வாக்கெடுப்பு

தமிழக அரசின் “தமிழில் அர்ச்சனை” திட்டம் குறித்து, சமகால வரலாற்று ஆய்வாளர் செந்தலை ந.கவுதமன் கூறியதாவது:–

‘‘கோவை மாவட்டம் பேரூரில் 9 ஆண்டுகளுக்கு முன் எந்த மொழியில் வழிபாடு நடத்தலாம் என கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 90 விழுக்காடு பேர் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என சொல்லி கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.

7ஆம் நூற்றாண்டு வரை கோயில் என்பதே இல்லை. சம்மந்தர், அப்பர், சுந்தரர் பாடிய கோயில்கள் எல்லாம் கல் கோயில்கள் தான். அங்கு எல்லோரும் வழிபடலாம். அவரவர் மொழியில் தான் வழிபட்டு வந்தனர். மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் கோயிலும் தான் முதல் கற்கோயில். அதிலும் தமிழில் தான் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. தேவாரமும், திருவாசகமும் பாடப்பட்டது.

14ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் கோயில்களில் தமிழ் வழிபாடு நடத்துவதற்கென்றே தொகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்த நூல் ‘திருவிசைப்பா’. ஒன்பது அடியார்களின் பாடல் தொகுப்பு இது.

14ஆம் நூற்றாண்டுக்கு பின் கோயில்களில் சமஸ்கிருத வழிபாடு முழுமையாக வந்துவிட்டது. இதை எதிர்த்து அருணகிரி நாதர், தாயுமானவர், வள்ளலார் குரல் கொடுத்தனர்.

மொழி புரியாத கடவுளிடம்…

எனக்கு இந்த மொழி தான் புரியும் என எந்த கடவுளும் சொல்லவில்லை. என் மொழி புரியாத கடவுளிடம் என் கோரிக்கையை எப்படி சொல்ல முடியும். நாட்டுப்புற கோயில்களில் தமிழில் தான் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

“அர்ச்சனை பாட்டே ஆகும்

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு என்றார்

தூமறை போற்றும் வாயார்”

தமிழில் தம்மை பாடுமாறு சிவபெருமானே கூறியதாகப் பெரியபுராணத்தில் சொல்கிறார் சேக்கிழார்.

மக்களின் மொழி எங்கு இருக்கிறதோ அது மக்களுக்கு பொதுவான இடமாக மாறி விடும்.

தமிழில் அர்ச்சனை என்பது சமத்துவத்தின் அரிச்சுவடி என்று சொல்லலாம். மொழிகளுக்கிடையில் சமத்துவம் இல்லை என்றால் சமூகத்தில் சமத்துவம் இருக்காது. இது கோயிலில் இருந்து துவக்கப்பட்டு இருக்கிறது.

கருவறையில் தமிழ்

“தெற்கோதும் தேவாரம்

திருவாய்நன் மொழியான

தேனி ருக்கச்

செக்காடும் இரைச்சலென

வேதபா ராயாணமேன்

திருக்கோ யில்பால்? “என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

தேவாரம் திருவாசகத்தில் இருக்கும் சொற்கள் தேன். இத்தனை பாதுகாத்து கொடுப்பதற்கான இடம் இல்லை. காரணம் கருவறையில் தமிழ் இல்லை.

மொழி காப்பாற்றப்பட வேண்டும். மொழி காப்பாற்றப்பட்டால் தான் இனம் காப்பற்றப்படும். இனம் காப்பாற்றப்பட்டால் தான் நாடு காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *