விழுப்புரம், மே 11–
தமிழிசை என்ற பெயர் கூட திராவிட மாடல்தான் என்று, தமிழிசைக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் கூறி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் – தமிழ்நாடு அரசின் சார்பில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நேற்று துவங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கு ஏற்ப சூடான் நாட்டிலிருந்து 247 பேரை இதுவரை மீட்டிருக்கிறோம். சூடானில் இருக்கும் தமிழர்கள் சிலர், தங்களுக்கு பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும், அப்படி நாட்டுக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டால் கூறுகின்றோம், அப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள் எனவும் தெரிவித்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
பெயரே திராவிட மாடல்தான்
மேலும் தமிழிசையின் திராவிட மாடல் கருத்து குறித்து அமைச்சர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்; மூடப்பழக்கங்களிலே இருப்பவர்களை மீட்க வேண்டும் என்பதற்காகவும்; எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வை எல்லோரும் பெறுவதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் தான்.
மாறாக, தனிமனித விமர்சனத்திற்காக திராவிட மாடல் இல்லை. தமிழிசைக்கு அந்த பெயர் இருப்பதே திராவிட மாடல்தான். அவர் படித்தது, பட்டம் பெற்றது, ஏன்… இலக்கிய தென்றலாக தகப்பனார் இருப்பது எல்லாமே திராவிட மாடல்தான் என்று கூறினார்.