சென்னை, ஜூன் 15–
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விரலை காட்டி கோபமான முகத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்கட்சி மோதல் விவகாரத்தில் தமிழிசையை, மத்திய மந்திரி அமித்ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன? என்பது குறித்து தமிழிசை தனது எக்ஸ் வலைத்தளத்தில் விளக்கமளித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ தொகுதியில் கட்சி பணிகளை தொடருமாறு அமித்ஷா தன்னை அறிவுறுத்தினார்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தமிழிசையை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழிசைக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் 2 பேரும் கட்சி வளர்ச்சிப்பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரை மணி நேரம் பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தமிழிசையுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
மூத்த பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அவரது அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு மூலம் தமிழிசை, அண்ணாமலை இடையிலான மோதல் போக்கு விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.