கொழும்பு, பிப். 2–
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக 1980-களில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய போது, ராணுவத் தேவைகளுக்காக தமிழர்களின் நிலங்களை அரசு கைப்பற்றியது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றிலும் உயர் பாதுகாப்பு வளையத்தை அமைக்க, தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு
இந்த நிலங்கள் தமிழர்களின் ஒப்படைக்கப்படும் என அதிபர் தேர்தலின் போது அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்திற்கு அனுர குமார திசாநாயக்க சென்றார்.
அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும், இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்படும் எனவும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதி அளித்தார்.