சிறுகதை

தமிழன்பனின் முடிவு |தர்மபுரி சி.சுரேஷ்

தமிழன்பன் சார் திடீரென்று எடுத்த இந்த முடிவு எல்லோருக்கும் கேள்விக் குறியாகவும் வேதனையாகவும் இருந்தது

“தமிழன்பன் சார் உங்களுக்கு இன்னும் சர்வீஸ் எட்டு வருஷம் இருக்கு. ஏன் இப்பவே ரிசைன் லெட்டர் கொடுக்கலாம்னு யோசிக்கிறீங்க? ” என்றார் உடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் முருகேசன்.

பாலக்கோடு வட்டத்தில் அமைந்திருந்தது அந்த ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

ஒவ்வொரு வருடமும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் அற்புத பள்ளியாக அது காணப்பட்டது

ஒற்றுமையான ஆசிரியர்கள்; மாணவர்கள் மீது கரிசனை கொண்ட அன்பான திறமையான ஆசிரியர்கள்.அதனால்தான் தமிழன்பன் சார் திடீரென்று எடுத்த இந்த முடிவு எல்லோருக்கும் கேள்விக்குறியாகவும் வேதனையாகவும் இருந்தது

அவர் விஆர்எஸ் வாங்குவது யாருக்கும் பிடிக்கவில்லை; காரணம் ஒவ்வொரு நாளும் அவ்வளவு அன்னியோன்யமாக ஒவ்வொருவரோடும் சிரித்துப் பழகி பேசுகின்ற அவரை விட்டுவிட எவருக்கும் மனமில்லை.

அவரிடம் படிக்கும் சக மாணவர்களும் “ஐயா தயவு செய்து எங்களை விட்டுட்டு போயிடாதீங்க” என கெஞ்சினார்கள்.

அவரோ சலிப்புடன் தன் மாணவர்களிடம் “போங்கடா தமிழ் ஆசிரியர்களுக்கு இனி என்ன மரியாதை இருக்குது. எஜுகேஷன் சிஸ்டமே மாறிட்டு இருக்கு. இனி நான் இங்க வொர்க் பண்ணி என்ன பண்ண போறேன்” என்றார்

மாணவர்களோ “ஐயா தமிழும் நீங்களும் எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதை யாராலும் தடை பண்ண முடியாது. நீங்க வருத்தப்படாதீங்க. தமிழ் எங்க ரத்தத்தில் ஊறி இருக்கு தாய்மொழி” என்றார்கள்

“இதுக்காக கவலைப்பட்டுக்கிட்டு உங்க பொழப்ப ஏன் நீங்க இழக்க விரும்புறீங்க?” என்று கூடப் பணிபுரியும் சக ஆசிரியர்கள் ஆலோசனை கூறினார்கள்

“முடியலப்பா. நாட்டில இது யாருக்கு அவசியம் …..? இதப் படிச்சா வேலை வாய்ப்பு கிடைக்குமா? அதப் படிச்சா வேலை வாய்ப்பு கிடைக்குமா? ஏன் இப்படிச்செய்யணும்?. இப்ப இருக்கிற எஜுகேஷனல் சிஸ்டத்தில் என்ன குறை”தமிழன்பன் தன் மனதின் ஆதங்கத்தை சக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்

அவர்களோ “சார் நாம என்ன சார் செய்ய முடியும்?. மேல என்ன சொல்றாங்களோ அதன்படி போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்” என்றார்கள்.

“இல்ல… நாம இருக்கிற நாட்கள் எப்படியோ ஓட்டிடலாம். ஆனா நமக்கு பிறகு வரக்கூடிய சந்ததிகள் நிலைமையை யோசிச்சுப் பாருங்க” என்றார் ஆதங்கத்துடன்.

கூடவே ஆங்கில ஆசிரியர் “ஆமாம் இன்டர்நேஷனல் லாங்குவேஜ் ஆங்கிலமே எல்லோருக்கும் போதுமானது. ஏன் இது?” என அவர் பங்குக்குக் கூறினார்

அடுத்து உடற்கல்வி ஆசிரியர் “ஏன் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்? ” என வருத்தப்பட்டார். “நீங்க சொல்றதும் சரிதான். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவரவரின் தனிப்பட்ட விருப்பம்னு விட்டுவிடுவது நல்லது” எனப் பதிலுரைத்தார் கணித ஆசிரியர்.

அடுத்து உடற்கல்வி ஆசிரியர் தமிழன்பனை பார்த்து “ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான். உங்க மாதிரியே நாங்க எல்லாரும் ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டா அப்புறம் பள்ளிய யார் நடத்தறது?

என்றார்.

“இப்படி நாம் ஒதுங்கி ஒதுங்கி போனதாலதான் நாட்டுல எந்த நல்லதும் நடக்க மாட்டேங்குது” என்றார் தமிழன்பன்

“சரி சார் இப்ப கிளாஸ் டைம். எல்லாரும் அவங்கவங்க கிளாஸுக்கு போகலாம்” என்றார் இன்னொரு ஆசிரியர்.

எல்லோரும் வகுப்புகளுக்கு கிளம்பிப் போனார்கள்.

*

தமிழன்பன்பனோ குழப்பத்தோடே இருந்தார்.

பணியைத் தொடரலாமா? விட்டுவிடலாமா? எனும் கேள்விக்குறியோடு.

அதே எண்ணம் மனதில் பயணிக்க மாலை வீடு வந்து சேர்ந்தார்.

வீட்டில் எப்பொழுதும் சிரித்து கலகலப்பாக பேசும் தமிழன்பனின் முகம் சுண்டிப் போய் இருப்பதை பார்த்த மனைவி ,

“என்னாச்சுங்க டீ, காபி ஏதாவது சாப்பிடறிங்களா? சோர்ந்துபோய் இருக்கிறீங்க” என்றாள்.

அவரோ பள்ளியில் பணியைத் தொடரலாமா? வேண்டாமா? என்ற தன் நிலையை மனைவியிடம் விளக்கினார்.

அவன் சொல்வதைக் கேட்ட சுந்தரவல்லி,

“ஏங்க இதுக்கா இவ்வளவு கவலை பட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கீங்க . உங்களுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருது. அதுக்காக விவாகரத்து பண்ணிட்டீங்களா ? அதுதான் முடிவா? அப்ப நம்ம பிள்ளைகளுடைய எதிர்கால என்ன ஆகிறது? ” என்றாள்.

எட்டாம் வகுப்பே படித்து இருந்த தன் மனைவியின் வார்த்தையால் ஞானக் குட்டுப்பட்டு தீர்க்கமான முடிவுக்கு வந்தார் தமிழன்பன்.

அடுத்த நாள் அவருடைய பிறந்த நாள். புத்தாடை அணிந்தவராய் பள்ளிக்குச் சென்றார்.

ஆசிரியர்களிடம் “தமிழுக்கும் நம்மை நம்பி வந்த மாணவர்களுக்கும் பணி செய்வதே என்னுடைய பாக்கியம்” என்றார்.

தன் பிறந்தநாளுக்காக வாங்கி வந்த இனிப்பை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வழங்கினார்.

எல்லோரும் இரட்டிப்பான மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *