சென்னை. பிப்.1-
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அவர் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஆதவ் அர்ஜூனா பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவரை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார். அங்கு விஜய்யை சந்தித்து ஆதவ் அர்ஜூனா த.வெ.க.வில் இணைந்து கொண்டார். கட்சியில் இணைந்த சில மணி நேரத்திலே அவருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியை விஜய் வழங்கினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை பொது தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வெற்றிக்கான வியூகத்தை அமைக்க உள்ளார். அவர் ஏற்கனவே தனியாக தேர்தல் கள ஆய்வு அமைப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அண்ணாதி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், பேச்சாளர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களை யும் விஜய் வரவேற்றார்.
இதில் நிர்மல் குமாருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப் பொதுச் செயலாளர் பதவியும், ராஜ்குமாருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர, தலைமை கழக இணைப் பொருளாளராக பி.ஜெகதீஷ், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக லயோலா மணி, ஏ.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
மத்திய சென்னை-–எஸ்.கே.எம்.குமார், கிருஷ்ணகிரி கிழக்கு-–முரளி, கிருஷ்ணகிரி மத்தியம்-–ஜி.சுரேஷ், கிருஷ்ணகிரி மேற்கு-–வடிவேல், தேனி தெற்கு–-வி.பாண்டி, தேனி வடக்கு-–எஸ்.பிரகாஷ், நெல்லை தெற்கு-–எஸ்.ராஜகோபால், நெல்லை வடக்கு-–அந்தோணி சேவியர்.
தஞ்சாவூர் வடக்கு–-நிஜாம் அலி, தஞ்சாவூர் மேற்கு-–ரமேஷ், வேலூர் கிழக்கு-–ஏ.நவீன், வேலூர் மேற்கு-–ஆர்.வேல்முருகன், சேலம் மேற்கு–-கே.செல்வம், சேலம் தெற்கு-–ஆர்.எஸ்.மணிகண்டன், சேலம் கிழக்கு-–என்.வெங்கடேசன், சேலம் வடக்கு, மேற்கு-–கே.செந்தில்குமார். திருப்பூர் தெற்கு-–ஆர்.திருமலை, திருப்பூர் மேற்கு-–ஜி.கே.சங்கர், ராமநாதபுரம் கிழக்கு-– மலர்விழி ஜெயபாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பின்னர் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.