சென்னை, ஜன.25-
தமிழக வெற்றிக்கழகத்திற்கு நிர்வாக ரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை விஜய் தேர்வு செய்துள்ளார். முதல் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை துரிதமாக மேற்கொள்ள அமைப்பு ரீதியாக 234 சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கி 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு கட்சியின் விதிகளின்படி மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் (அரியலூர், ஜெயங்கொண்டம்), ராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர், அரக்கோணம்) – வி.காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு (ஆற்காடு, ராணிப்பேட்டை) -ஜி.மோகன்ராஜ், ஈரோடு கிழக்கு (அந்தியூர், பவானி, பெருந்துறை) – எம்.வெங்கடேஷ்.
ஈரோடு மாநகர் (ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி) – எம்.பாலாஜி, ஈரோடு மேற்கு (பவானி சாகர், கோபிசெட்டிபாளையம்) – ஏ.பிரதீப்குமார், கடலூர் கிழக்கு (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி) – பி.ராஜ்குமார்.
கடலூர் தெற்கு (சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்) – எஸ்.சீனுவாசன், கடலூர் மேற்கு (திட்டக்குடி, விருத்தாசலம்) – எஸ்.விஜய், கடலூர் வடக்கு (நெய்வேலி, புவனகிரி) – கே.ஆனந்த், கரூர் கிழக்கு (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்) – ஜி.பாலசுப்ரமணி, கரூர் மேற்கு (கரூர், அரவக்குறிச்சி) – வி.பி.மதியழகன்.
கள்ளக்குறிச்சி கிழக்கு (திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை) – ஆர்.பரணி பாலாஜி, கோவை தெற்கு (கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி) – கே.விக்னேஷ், கோவை மாநகர் (கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்) – வி.சம்பத்குமார்.
சேலம் மத்தியம் (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு) – ஏ.பார்த்திபன், தஞ்சாவூர் தெற்கு (பட்டுக்கோட்டை, பேராவூரணி) – ஜி.மதன், தஞ்சாவூர் மத்தியம் (திருவையாறு, தஞ்சாவூர்) – ஆர்.விஜய் சரவணன், நாமக்கல் மேற்கு (பரமத்தி வேலூர், நாமக்கல், குமாரபாளையம்) – என்.சதீஷ்குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்சியின் வளர்ச்சி
பணி திட்டங்கள்
சென்னை உள்ளிட்ட விடுப்பட்ட மாவட்டங்களுக்கு விரைவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. முன்னதாக நேற்று மதியம் 1 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரை யும் தனித்தனியாக அழைத்து அவர்களி டம் விஜய் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாவட்ட செயலாளர்களிடம், அவர்களது மாவட்டத்தில் மற்ற கட்சிகளின் பலம், மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் கட்சியின் வளர்ச்சி பணிக்கு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், மாவட்ட செயலாளர்களின் பதவி 4 ஆண்டுகள் மட்டுமே. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் பதவி தானாக வரும். எந்த பதவிக்கும் பணம் வாங்கக்கூடாது. இதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பணம் வாங்கினால்
கட்சியை விட்டு நீக்கம்
யாராவது பணம் வாங்கினால் அவர்களை கட்சியை விட்டு நீக்க கூட தயங்க மாட்டேன். நீங்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
சட்டசபை பொது தேர்தலே நம்முடைய இலக்கு. உழைக்க தயாராக இருங்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இப்போதே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். உங்கள் அனைவரையும் நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன். நீங்கள் அனைவரும் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
இவ்வாறு விஜய் வலியுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
19 மாவட்ட செயலாளர்களுக்கு நியமன உத்தரவு கடிதம், கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் ஆகியவற்றை விஜய் வழங்கினார்.
நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும், கட்சியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவை பிப்ரவரி 2-ந் தேதி தமிழகம் முழுவதும் கொடியேற்றி கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது