ஆர்.முத்துக்குமார்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று கூடியது. அதில் பட்ஜெட் சமர்பிப்பு பற்றிய பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் வரும் 2023 – 24-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் மார்ச் 20–ம் தேதி தாக்கல் செய்கிறார். 21–ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
தமிழக பொது பட்ஜெட்டை பொறுத்தவரை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கு நிதி ஒப்புதல் மற்றும் தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல் தரப்பட்டும் இருக்கிறது.
2025–ல் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக உயர இருப்பதால் பலவித வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் நாட்டின் உற்பத்தியில் தற்போதைய 15.6 சதவிகிதத்தில் இருந்து 21 சதவிகிதமாக உயர இருக்கிறது. இந்த இலக்கை அடைய தொழில்துறை வளர்ச்சியின் அனைத்து கட்டுமானமும் விரிவாக இருக்கிறது, வலுவாகவும் செயல்படும்.
அதில் ‘லாஜிஸ்டிக்ஸ்’ அதாவது சரக்கு டெலிவரி சேவை சிறப்புற செயல்பட வேண்டிய அதிமுக்கிய அம்சமாகும்.
தமிழகம் அடுத்த தலைமுறை வளர்ச்சிகளுக்கு தயாராகி விட்ட நிலையில் சரக்கு பரிவர்த்தனை கட்டுமானமும் சிறப்பாக செயல்பட , ஊக்கம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள், வழிவகைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டில் இருக்குமா? என தொழில்துறையினரும் நிபுணர்களும் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.