செய்திகள்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

Makkal Kural Official

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 3–-

இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர் களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-– சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 1ம் தேதியன்று 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், 2 பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

1974-ம் ஆண்டில் இருந்தே, அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வை தொடர்ந்து இந்த பிரச்சினை நிலவுவதாக நீங்கள் உங்களின் 27.6.2024 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். தி.மு.க. தலைமையிலான மாநில அரசு, கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது. தி.மு.க. தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, அது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்க வில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்திய மீனவர்களின் உரிமை களுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத்தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான்.

தேர்தல் முழக்கமாக பயன்படுத்துகிறது

அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசிய லமைப்பிற்கு முரணானதாக இருக்கும் போது, கச்சத்தீவின் இறையாண்மையை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்த பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *