சென்னை, மார்ச் 30–-
தமிழக மக்களின் மீது மதிப்பும், மரியாதையும் இருப்பதாகவும், தாய்மொழி தமிழாக இல்லையே என்ற வருத்தம் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘என் பூத் வலிமையான பூத்’ என்ற பெயரில் தமிழகத்தில் பா.ஜனதா ‘பூத்’ கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்களுடன், ‘நமோ’ செயலி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். அத்துடன், ‘பூத்’ கமிட்டி உறுப்பினர்களிடம், ‘பூத்’ அளவிலான செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது என்ற கருத்துகளை கேட்டறிந்தார்.
அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:–-
தமிழகத்திற்கு நான் வந்தபோது, மக்கள் எனக்கு அளித்த வரவேற்பை காணும்போது என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதற்கு, பாரதீய ஜனதா தொண்டர்களின் உழைப்புதான் காரணம். மத்திய அரசு செயல்படுத்தும் பெண்கள் நலத்திட்டங்கள் குறித்து தமிழக பெண்கள் அறிந்துள்ளார்கள். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை சேமித்து வைக்க குடோன்கள் கோருகின்றனர். மத்திய அரசு நாடு முழுவதும் 2 லட்சம் நெல் சேமிப்பு குடோன்களை கட்டுவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்களுடன், கலாசாரத்துக்கான திட்டங்களையும் முன்னேடுத்தோம். அதன்படி, தமிழ்மொழியின் மீதும், தமிழக மக்களின் மீதும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் காசி-தமிழ் சங்கமம் நடத்தினோம். தமிழுக்காக நாம் உழைப்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கவேண்டும். அதுகுறித்த விவரங்களை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும்.
போதை பொருட்கள் நம் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துவிடும். போதை பொருட்கள் கடத்தல் குற்றவாளிகளை நாங்கள் கைது செய்கிறோம். அப்போதுதான் அதில் ஒரு விஷயம் தெரிந்தது. போதை பொருட்கள் கடத்தல்களை நடத்தும் தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வருகிறது. இதை வேரோடு அழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ் மொழி உலகின் மூத்த மொழி. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தம் உள்ளது. தமிழ் தாய் மொழியாக கிடைக்காதது வருத்தம் தருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து மக்களுக்கான ஆட்சி இல்லை. எங்கும் ஊழல் உள்ளது. சட்டம்-ஒழுங்கு கவலைக்கிடமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களை, கிராம அளவிலும், பூத் அளவிலும் பா.ஜனதா தொண்டர்கள் எடுத்து சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் தற்போது அரசியல் களம் மாறிவிட்டதாக டெல்லி மேலிடங்கள், கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தமிழக மக்களின் சிந்தனை மாறி உள்ளது. அவர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாநில அரசின் மீதான கோபம், மத்திய அரசின் மீதான அனுகூலம் சேர்ந்து களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் நல்ல திட்டங்களை எல்லாம் மக்களுக்கு செல்லவிடாமல் தி.மு.க. ஆட்சியினர் தடுக்கிறார்கள். தடுக்க முடியாத திட்டங்களை அவர்களின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு செல்கிறார்கள். ஸ்டிக்கர் ஒட்டினாலும் பரவாயில்லை பூத் உறுப்பினர்கள் அந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்கவேண்டும்.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் மொத்த தமிழகத்தையும் ஜெயித்துவர வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அதனால் அவர் தன்னுடைய கோவை தொகுதியில் பணியாற்ற நேரம் இல்லாமல் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருப்பார். நான் தமிழகத்தில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களையும் அண்ணாமலையாக பார்க்கிறேன். எல்லாரும் வெற்றி பெற்று டெல்லி வரவேண்டும். நம்முடைய கூட்டணி கட்சிகள் நவரத்தினங்கள் போன்றவர்கள். அவர்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.