செய்திகள்

தமிழக பள்ளிக்கல்விக்கான திட்ட நிதி ரூ.2,401 கோடி: மத்திய அரசு நிறுத்தம்

Makkal Kural Official

சென்னை, பிப்.12-

தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 2,401 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் 2024-–25-ம் கல்வியாண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடியை ஒதுக்க அதற்கென்று வகுக்கப்பட்ட குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, கல்வியாண்டு தொடங்கி, தற்போது நிறைவடைய உள்ள நிலையிலும் இதுவரை மத்திய அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்கவில்லை.

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணையாததால், அந்த நிதி விடுவிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு விரிவான அறிக்கையை நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமானது 2018-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தை செயல்படுத்து வதற்காக திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, 2024-–25-ம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

2023-–24-ம் ஆண்டுக்கு தமிழ்நாட்டிற்கென ரூ.3,533 கோடி திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியில் 2 தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், 3-வது தவணை விடுவிப்பதற்கு முன்பாக மத்திய அரசு பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் நிதியை விடுவிக்கமுடியும் என வலியுறுத்தியது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வது சார்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரால் 23.2.2024 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, தனது அறிக்கையில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல் நிபந்தனையாக மும்மொழி கொள்கையை பின்பற்றுவதை வலியுறுத்தி உள்ளது. இந்த நிபந்தனையானது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்து வதையும், ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்து வதையும் ஒன்றாக கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியை விடுவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், 2024-–25-ம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும், மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.17,632.41 கோடி நிதியினை மத்திய அரசு விடுவித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-–24-ம் ஆண்டிற்கான 4-வது தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-–25-ம் ஆண்டிற்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *