சென்னை, ஜூன் 12–
தமிழக சட்டசபை கூட்டம் வரும் 20–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது.
பிறகு, மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல், பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார்.
இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டமன்றம் கூடும் தேதி 24-ல் இருந்து ஜூன் 20-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 29-–ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 20–ம் தேதி முதல் 29–ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்.
வழக்கமாக காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் நிலையில், இந்த முறை காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TamilNews #Makkalkural