செய்திகள்

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை, பிப்.18-

தமிழக சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கல் ஆகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை வாசிக்கிறார்.

தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்.

நாளை (திங்கட்கிழமை) தமிழக சட்டசபையில் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணிக்கு பட்ஜெட் அறிக்கையை படிக்க தொடங்குவார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று தெரிகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

அதில், வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய்கள், வரியல்லாத வருவாய்கள், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அதற்கு முந்தைய பட்ஜெட் எப்போதுமே சற்று சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். அந்த வகையில் புதிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியும். புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

அதைத்தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். 21ந் தேதி காலை மற்றும் மாலை நேரத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு 22ந் தேதியன்று அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *