தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்த பின்னர் அவையிலிருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
கவர்னர் கோரிக்கையை ஏற்று பாடப்பெற்ற தேசியகீதம்
சென்னை, பிப்.12 –
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
அனைவருக்கும் தமிழில் பேசி வாழ்த்து கூறினார் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் 2 நிமிடங்களில் கவர்னர் உரையை நிறைவு செய்தார்.
கவர்னர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர்
அப்பாவு வாசித்தார். அதுவரை அவையிலிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி பின்னர் அவையிலிருந்து வெளியேறினார் .
கவர்னர் கேட்டுக்கொண்ட கோரிக்கையை ஏற்று முடிவில் தேசியகீதம் பாடப்பெற்றது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த நிலையில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
––––––––––––––––––––––––––––
அணிவகுப்பு மரியாதை
–––––––––––––––––––––––––
இதையடுத்து இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ப தற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கவர்னர் அவைக்கு வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அடுத்து வைக்கப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் அப்பாவு அமர்ந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி. ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் தமிழில் பேசியதாவது: –
“சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும். அவையில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவர்னர் தமிழில் பேசிவிட்டு பின்னர் கவர்னர் உரையை வாசிக்காமல் சில கருத்துகளை ஆங்கிலத்தில் பேசினார் . அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ்வைந்து” மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும் அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி” என்று கூறி தனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.
––––––––––––
சில விநாடிகள்
சலசலப்பு
–––––––––––
மாநில அரசு தயாரித்த கொள்கை உரையை படிக்காமல் புறக்கணித்து இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு கவர்னர் உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார்.
கவர்னர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்கும் நேரத்தில் கவர்னர் என். ரவி அவையிலேயே இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார்.
–––––––––––––––––––––––––––––
கவர்னருக்கு சபாநாயகர்
அப்பாவு கோரிக்கை
–––––––––––––––––––––––––––
சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்து முடித்ததும் கவர்னருக்கு ஒரு கோரிக்கை வைத்து பேசினார்.
அப்போது சபாநாயகர் பேசியதாது: –
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் வெள்ள நிவாரணத்திற்கும் தமிழக அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு இன்னமும் தரவில்லை. இதை தமிழகத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து கவர்னர் ஐயா அவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கேட்டார்.
அவர் என்ன பேசுகிறார் என்று கவர்னர் தனது உதவியாளரை அழைத்து கேட்டார். அவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார்.
அதன் பின்னர் அவையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
கவர்னர் கேட்டுக்கொண்ட கோரிக்கையை ஏற்று கூட்ட முடிவில் தேசியகீதம் பாடப்பெற்றது. அதைத்தொடர்ந்து இன்றைய கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கடந்த மாதம் கேரள சட்டசபை கூட்டத்திலும் அம்மாநில கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.