செய்திகள்

தமிழக கோவில்களை தி.மு.க. அரசு ஆக்கிரமித்துள்ளது என்பதா? மோடிக்கு, ஸ்டாலின் கண்டனம்

சென்னை, அக்.6-–

‘தமிழக கோவில்களை தி.மு.க. அரசு ஆக்கிரமித்துள்ளது என்பதா?’, என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வள்ளலார் – 200-வது ஆண்டையொட்டி நடத்தப்பட்ட ஓராண்டு தொடர் நிகழ்வின் நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.99 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையை, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் வழங்கினார். மேலும், வள்ளலாரின் இறை அனுபவங்கள் என்ற நூலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து வள்ளலார் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து, அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள். அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள். அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள். இவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக 52 வாரங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இது நிறைவு விழா அல்ல, நிறைவான விழா. வள்ளலாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவாக ஆற்றியுள்ளோம்.

இன்று இந்த காலகட்டத்துக்கு தேவையான வழிகாட்டி வள்ளலார். இறையியல் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உரிமை. ஆனால் அந்த இறையியலை, ஆன்மிக உணர்வை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி, அதன்மூலமாக குளிர்காய பார்க்கிறது. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்று பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள்தான் தமிழக மக்கள். அந்த மக்களை குழப்ப சிலர் முயற்சித்து வரும் காலத்தில், வள்ளலார் நமக்கு அறிவு திறவுகோலாக காட்சியளிக்கிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 419-வது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று சொல்லியிருந்தோம். அந்த மையத்தின் ஆணையை இன்று வழங்கியுள்ளோம். விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டி முடிக்கப்படும்.

பிரதமரால் மறக்க முடியாத

மாநிலம் தமிழகம்

வள்ளலாரின் அறிவு ஒளியில் பிளவு சக்திகள் மங்கி போவார்கள். நாம் வள்ளலாரை உயர்த்தி பிடிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. பெரியாரை போற்றுகிறார்கள். அதேவேளை வள்ளலாரையும் கொண்டாடுகிறார்களே… என்று அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்கிறார்கள். ஆனால் கோவில்களை பொன்போல போற்றி பாதுகாக்கிறார்களே… என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.

சமீபத்தில் தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக கோவில்கள் பற்றி பேசியிருக்கிறார். அவர் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் தமிழகத்தை பற்றிதான் பேசுகிறார். அவரால் மறக்கமுடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை தி.மு.க. அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்துகிறது என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமர் நரேந்திரமோடிக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

பிரதமர் தவறான அவதூறுகளை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா, தர்மமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை ஆக்கிரமித்தது போலவும், கோவில் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துவது போலவும் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை அவர் எதிரொலிக்கிறார்?

இந்த 2 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம். 112 பழமையான கோவில்களை சீரமைக்க ரூ.100 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 கோவில்களில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இவையெல்லாம் தவறா? எதை தவறு என்கிறார் பிரதமர்? அவரது பார்வையில் தான் தவறு இருக்கிறது. எங்களை பொறுத்தவரையில் பொதுத்தன்மையுள்ள, கருணையுள்ள ஆட்சி நடத்தி வருகிறோம். அதற்கு அடையாளமாக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறோம். கடலூர் மாவட்ட தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள புதிய பஸ் நிலையத்துக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப்பணி அதிகாரி ஜெ.குமரகுருபரன், கமிஷனர் க.வீ.முரளீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *