சென்னை, ஜன. 31–
குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, ‘கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீசார் செயல்படுத்துவதில்லை’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், ‘இது தொடர்பான விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்று அரசு தரப்பில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக உள்துறை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில், சுப்ரீம் கோர்ட்டில் அவர் தடை உத்தரவை பெற வேண்டும். இவை இரண்டையும் செய்யவில்லை எனில் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்’ என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.