செய்திகள்

தமிழக அரசு 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற

தமிழக அரசு 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது:

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

சென்னை, ஜூன் 23–

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவது குறித்து தமிழக அரசு 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்களுக்கு வெப்பமானி கருவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா பாதிப்படைந்த 922 பேர் திருவொற்றியூர் பகுதியில் குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மருத்துவ குழு எப்படி பணியாற்றி வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மண்டலவாரியாக மருத்துவ குழுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று தெர்மல் மீட்டர் கொண்டு பரிசோதனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது லட்சக்கணக்கான மக்களை தமிழக அரசு காத்து வருகிறது. இதுவரை 2.5 லட்சம் மக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் மண்டலம் அனைத்து மண்டலத்திற்கும் முன் மாதிரியாக உள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *