சென்னை, அக்.19-–
மத்திய அரசைபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 2 முறை அகவிலைப்படியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்குகின்றன. ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும், ஜூலை 1-ந் தேதியில் இருந்தும் இந்த உயர்வுகள் கணக்கிட்டு வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த உடனேயே அதை பின்பற்றி தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது.
மத்திய அரசைப் போல…
பிரதமர் மோடி தலைமையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரிசபை கூட்டம் நடபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
3 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அதில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் அதை கனிவுடன் பரிசீலித்து 1.7.2024 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிடப்படுகிறது. இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். என்றாலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்வு எவ்வளவு?
3 சதவீத அகவிலைப்படி உயர்வு மூலம் அவரவர் பணி நிலைக்கு ஏற்ப, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தில் உயர்வு ஏற்படும். அதன்படி, குறைந்தபட்சமாக தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் ரூ.600-ம், அதிகபட்சமாக கூடுதல் செயலாளர்கள் ரூ.4 ஆயிரம் வரையும் சம்பளத்தில் உயர்வு பெறுவர்.
அதுபோல ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்கள் ரூ.2 ஆயிரம் வீதமும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.4 ஆயிரம் வரையும் ஊதியத்தில் உயர்வு பெறுவார்கள்.
3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற செயலக நிருபர்கள் சங்கத் தலைவர் வரதராஜன், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தகுமார் உள்பட பல சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.