கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பேட்டி
கிருஷ்ணகிரி, மார்ச் 25–
தமிழக அரசின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று மறியல் செய்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் டெல்டா விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து கன்னட சலுவளி ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50 பேர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தமிழக எல்லைப்பகுதிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தினர். வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
இதனிடையே வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம், அதனை தடுத்தே தீருவோம் என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்.
தமிழர்களை
அழைத்து செல்லுங்கள்
மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.
“எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், மேகதாது குறித்து பேசியே தமிழகத்தில் அரசியல் செய்து வந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக ஏங்கி நிற்கும் சூழலில் தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டுமானால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக அங்கு அணை கட்டக்கோரி வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்குள் வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ததால், தமிழக எல்லை ஜூஜூவாடியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகவிற்குள் அனுமதிக்காமல் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்ல அனுமதித்தனர்.