சென்னை, ஜன.12-–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக சிந்திக்கும் தலைவர் என்றும், அரசின் கடனை அடைக்கும் திறனும், திறமையும் அவருக்கு உண்டு என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.
2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019–-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019–-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித்தமிழர்.
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ‘11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாரதீய ஜனதாவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாதம்தாங்கி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்ணா தி.மு.க.வையே பலீபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?.
மாணவர்களின் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வை தனது ஆட்சிக்காலத்தில் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து கொண்டு வந்து துரோகம் செய்தவர் பழனிசாமி. அதை மறைக்க திராவிட மாடல் அரசின் மீது வீண்பழியை சுமத்துகிறார். நீட் தேர்வை ரத்துசெய்ய ஏ.கே.ராஜன் கமிட்டி நியமனம், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் ரத்து மசோதா என நீட் தேர்வை ரத்துசெய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அத்தனை வழிகளிலும் திராவிட மாடல் அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க. அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராடியது.
மகளிர் உரிமைத்தொகையையும், மகளிர் விடியல் பயணத்தையும் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவருடைய ஆட்சியில் காயலான் கடை கணக்காக ஓடிக்கொண்டிருந்த பஸ்களை அகற்றிவிட்டு, புதிய பஸ்கள் வாங்கி தமிழ்நாடு முழுக்க விட்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அதிலும் மகளிர் இலவச பயணம் செய்யக்கூடிய பஸ்களை முற்றிலும் புதுமையானதாகவும், சிறப்பானதாகவும் வடிவமைத்து விட்டிருக்கிறோம். விடியல் பயணம் திட்ட பஸ்சுக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தியிருக்கிறார்.
கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்கிறார்கள் இந்த கடனை எப்போது அடைப்பார்கள் என்று ‘என்னவோ ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திறனும், திறமையும் முதலமைச்சருக்கு உண்டு. எடப்பாடி அவர்களே… எங்கள் முதலமைச்சர் இன்றைக்காகவோ, நாளைக்காகவோ சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக சிந்திக்கும் அக்கறையுள்ள ஒரு தலைவர்.
பெரியாரை சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி. இது அண்ணா தி.மு.க. இயக்கத்துக்கே அவமானம். தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியான யு.ஜி.சி. அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பதான் பாரதீய ஜனதாவின் அடியாளான சீமான் இப்படி பேசியிருக்கிறார் என்று புரிந்தததால்தான் பாம்புக்கும் வலிக்காமல், தடிக்கும் வலிக்காமல் பார்த்துக்கொண்டு கண்டிக்கிறார் பழனிசாமி. இதற்கு பதிலாக அண்ணா தி.மு.க. என்னும் பெயரையே அமித்ஷா தி.மு.க. என்றோ ஆர்.எஸ்.எஸ். தி.மு.க. என்றோ மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.