செய்திகள் போஸ்டர் செய்தி

தமிழகம் வெறிச்சோடியது

Spread the love

ஏப்ரல் 14–ந் தேதி வரை ஊரடங்கு

தடை உத்தரவை மீறினால் 6 மாதம் சிறை

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள்

மளிகை, காய்கறிகள் வாங்க அனுமதி

 

சென்னை, மார்ச் 25–

ஏப்ரல் 14–ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள்.சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் ஓடவில்லை.

அத்தியாவசிய தேவைக்காக இன்று சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 200 பஸ்களை இயக்கியது.

எல்லா இடங்களிலும் போலீசார் நின்று கண்காணித்து வந்தனர்.

தேவையில்லாமல் மோட்டார் சைக்களில் சுற்றி வந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

சில இடங்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடையை மீறி வந்தவர்களை போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டி அடித்தார்கள்.

6 மாதம் சிறை

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினால் 6 மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்தே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க சென்னை மாநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே விஸ்வநாதன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தீவிர கண்காணிப்பு

சென்னை மாநகர சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சாலையில் யாராவது தென்பட்டால் அவர்களிடம் சென்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள், கார்களில் செல்பவர்களை மடக்கி நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எதற்காக வெளியில் வந்தீர்கள்? என்று கேள்விகளை கேட்கிறார்கள். இது போன்று பிடிபடுபவர்களை போலீசார் முதலில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இதே நிலையே நீடிக்கிறது.

மாவட்ட எல்லைகள் மூடல்

சென்னையில் இருந்து யாரும் வெளியேற முடியாத வகையிலும் வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத வகையிலும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் இது போன்று மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் இன்னும் முடக்குதலை மீறி வெளியே வருவதால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை மீறுபவர்கள் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதனால், அரசின் உத்தரவுகளை மீறியதற்காக, ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும்.

மளிகை, காய்கறிகள் வீடுகளுக்கு சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வீடுகளில் உணவு வினியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *