அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, ஜன.11-–
தமிழகம் முழுவதும் உள்ள 764 கோவில்களில் தினமும் 85 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3 கோவில்கள் உள்பட 10 கோவில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் கொளத்தூர், சோமநாத சுவாமி கோவிலில் அன்னதான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–-
கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 754 கோவில்களில் மதியவேளை அன்னதானமும், அதில் 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் ‘10 கோவில்களில் அன்னதானத் திட்டம் புதிதாகத் தொடங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சூளை சீனிவாசப் பெருமாள் கோவில், கொரட்டூர் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அபிராமி ஈஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, உத்திரரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிகருப்பணசுவாமி கோவில், கோவை மாவட்டம், வடமதுரை, விருந்தீசுவரர் கோவில், வடவள்ளி கரிவரதராஜப்பெருமாள் கோவில் (மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபக்கோவில்), ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அனுமனீஸ்வரர் கோவில், தென்காசி மாவட்டம், கடையம், பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய 10 கோவில்களில் புதிதாக அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் 764 கோவில்களில் நாளொன்றுக்கு சுமார் 85 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அன்னதானத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகின்ற வகையில் எங்கெல்லாம் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் பக்தர்கள் பயனடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும். பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் உத்தரவின்படி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை நேரில் சென்று தொடங்கி வைத்தேன்.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த கோவிலின் (கொளத்தூர், சோமநாத சுவாமி கோவில்) சித்திரை குளம், சூரியன் குளம், விநாயகர் கோவில் மற்றும் கோவில் தரைத் தளம் போன்றவை ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ரா.கண்ணன், இணை ஆணையர்கள் ந.தனபால், சுதர்சன், உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தா.மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.