செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 நாள் அண்ணா தி.மு.க. பொதுக்கூட்டங்கள்

சென்னை, ஜன. 12–

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க. சார்பில் 18–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த கூட்டங்களில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித்தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 18–ந்தேதி வெள்ளிக் கிழமை முதல் 20–ந்தேதி ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள், எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பிற மாநிலங்களில்…

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17–ந்தேதி அன்று ஆங்காங்கே டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

யார், யார்

எந்தெந்த இடங்களில் யார், யார் பேசுகிறார்கள் என்று பட்டியலை தொகுதி வாரியாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *