செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

திண்டுக்கல், நவ.19-–

தமிழகம் முழுவதும் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-–

கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே 2-–வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.

இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *