செய்திகள்

தமிழகம் முழுவதும் விதவிதமான 50 ஆயிரம் வினாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

Makkal Kural Official

இன்று வினாயகர் சதுர்த்தி கோலாகலம்

கோவில்களில் வரிசையில் நின்று தரிசனம்

சென்னை, செப்.7–

தமிழகம் முழுவதும் இன்று வினாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான வினாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர்.

கோவில்களில் வினாயகருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம், பூஜைகள் நடந்தன.

எல்லா கோவில்களிலும் ‘கியூ’வில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

வீட்டில் பூஜை செய்ய சாலைகளில் விற்கப்பட்ட களிமண் வினாயகர் சிலைகளை பக்தர்கள் குழந்தைகளுடன் குதூகலமாக வாங்கி சென்றதை காண முடிந்தது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.. இந்த ஆண்டு இந்த விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் திருவிழாவான விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (சனிக்கிழமை) கோவில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலையில் தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

மதியம் மூலவருக்கு மோதகம் படையல் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் கார் பார்க்கிங் வசதி, உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு அமெரிக்க டைமண்டு கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாது லட்டு வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முத்தியால்பேட்டை காந்திவீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் காலை 7 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலையில் 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், 7 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.

2 டன் மலர்கள்

இதேபோல புலியகுளம் முந்தி விநாயகருக்கு 2 டன் மலர்களால் 40 கிலோ சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட 190 டன் எடை கொண்ட மிக பெரிய விநாயகர் சிலைக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர். விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

50 ஆயிரம் வினாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சென்னையில் 1,519 சிலைகளை வைப்பதற்கும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி நாளான இன்று வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு புஜைகள் நடத்தி பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

சென்னை ஆவடி கமிஷனர் அலுவலக பகுதிகளில் 683 சிலைகளும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 600 சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளன.இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் 2,800 சிலைகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சிலை ஏற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரும் ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடலில் கரைப்பு

இன்று வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, நீலாங்கரை பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.சென்னை மாநகர பகுதியில் 16,500 போலீசார் 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் தாம்பரம், ஆவடி பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *